அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வும் வாக்கும் அடங்கிய அன்னாரின் பொன்மொழிகளைத் தமிழில் தருகிற முதல் இணையதளம் இது.

இந்த ஹதீஸ் இணையதளத்தை எங்களது சென்னை ரஹ்மத் அறக்கட்டளை மூலமாக உங்களுக்கு வழங்க வாய்ப்பளித்த ஏக இறைவனுக்கு அகம் புறம் பணிந்து நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

ஒரு நல்ல நாகரீகமான அமைதியான வாழ்விற்குத் தேவையான சிறந்த கருத்துகளை நபிகள் நாயகத்தின் பொன்மொழிகளில் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

நபிகளாரின் பொன்மொழித் தொகுப்புகளில் பிரபலமானவை ஆறு தொகுப்புகள். அவை:

1. ஸஹீஹுல் புகாரீ,   2. ஸஹீஹ் முஸ்லிம்,   3. ஜாமிஉத் திர்மிதீ,   4. சுனன் அபூதாவூத்,   5. சுனன் நஸயீ,   6. சுனன் இப்னுமாஜா.

இஸ்லாமிய மார்க்கத்தின் அசலான செய்திகளை எடுத்துச்சொல்லும் இம்மூல நூற்களைத் தமிழ் கூறும் நல்லுலகிற்கு முறையாக மொழிபெயர்த்து வழங்க வேண்டும். அப்போதுதான் முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதவர்களும் இஸ்லாத்தைச் சரியாகப் புரிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும் என்ற சிந்தனையின் விளைவாகத்தான் “சென்னை ரஹ்மத் அறக்கட்டளை” நபிகளாரின் பொன்மொழித் தொகுப்புகளை மொழிபெயர்க்கவும் அவற்றைப் பதிப்பிக்கவும் தொடர்ந்து மக்களுக்குக் கிடைத்துவரும் வண்ணம் அவற்றை விநியோகிக்கவும் முயற்சியில் இறங்கியது. இம்முயற்சிக்கு பெரிய வெற்றியை அல்லாஹ் வழங்கினான். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.

மார்க்க அறிஞர்களும் சமுதாயப் பெரியோர்களும் அறிவுத் தாகம் மிகுந்த இளைய சமுதாயமும் உலகம் ழுழுவதிலுமிருந்து இதற்கு அங்கீகரிக்கபட்ட பணி என்ற சிறப்பைத் தேடித்தந்தனர்.

இம்மூல நூற்களில் முதலிரண்டு நூல்களான ஸஹீஹுல் புகாரீ, ஸஹீஹ் முஸ்லிம் ஆகியவற்றின் மொழிபெயர்ப்பு முழுமையாக வெளிவந்து நபிமொழிகள்மீது தாகம் கொண்ட வீடுகளில் ஒரு நூல் நிலையத்தைத் தோற்றுவித்துவிட்டது. அவற்றையடுத்து உலகப் புகழ்பெற்ற முதல்தரமான திருக்குர்ஆன் விரிவுரையான தஃப்சீர் இப்னு கஸீர் 5 பாகங்களும் , நபிமொழி நூல்களில் மூன்றாம் இடத்திலுள்ள ஜாமிஉத் திர்மிதீ இரண்டு பாகங்களும் வெளிவந்துள்ளன. இவ்விரு நூல்களின் எஞ்சிய பகுதிகளின் தமிழாக்கம் இன்ஷா அல்லாஹ் அடுத்தடுத்து வெளிவரும்.

இன்றைய கணிணி யுகத்தில் எந்தப் பணியும் இணையத்தில் தரப்படும்போதுதான் நிறைவடைகிறது.

அது மட்டுமின்றி, முன்னேறிய நாடுகளில் புத்தகங்களைவிட இணையத்தைப் பயன்படுத்துவது வழமையாகிவிட்டது. ஆப்ரிக்காவோ அமெரிக்காவோ எங்கோ ஒரு மூலையில் அமர்ந்தபடி வேண்டியது எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ள இணையம் வழிசெய்து கொடுக்கிறது. பிறசமயத்தவர் இஸ்லாமிய செய்திகளை நேரிடையாகப் படித்தறிந்துகொள்ளும் வாய்ப்பை இணையம் அதிக அளவில் ஏற்படுத்துகிறது.

தேவைப்படும் தகவல்களை எளிமையாகவும் விரைவாகவும் தேடி எடுத்துக்கொள்ளும் வசதி இணையத்தில் உண்டு.

எல்லாவற்றிற்கும் மேலாக, “என்னிடமிருந்து பெற்ற செய்தி ஒரு சிறு வசனமாக இருப்பினும் அதை அடுத்தவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்” என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உத்தரவை இயன்ற வழிகளில் எல்லாம் செயல்படுத்த கடமைப்பட்டுள்ளோம் என்ற எண்ணமும் நபிகளாரின் பொன்மொழிகளை இணையத்தில் இன்பத் தமிழில் வழங்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு உரமேற்றியது. அந்த எண்ணத்தின் செயல்வடிவாகவே இந்த www.rahmath.net உருவாகியுள்ளது. தமிழில் ஓர் இணையதளத்தை உருவாக்குவதில் உள்ள பல்வேறு சிரமங்களைத் தாண்டி பல சிறப்பம்சங்களுடன் இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தளத்தில் தற்போது ஸஹீஹுல் புகாரீயின் முழு மொழிபெயர்ப்பும் அதன் அரபி மூலத்துடன் உங்களுக்குக் கிடைக்கும். ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக தமிழில் இந்த வசதி கிடைத்துள்ளது. இன்ஷா அல்லாஹ் மற்றுமுள்ள தொகுப்புகள் அடுத்தடுத்த காலங்களில் தொடர்ந்து வரும். ஹதீஸ், ஹதீஸ் தொகுப்புகள், ஹதீஸ்கலை வரலாறு, தொகுப்பாசிரியர்கள் வரலாறு, ஹதீஸ் சம்பந்தமான மற்ற தகவல்களும் இத்தளத்தில் உங்களுக்குக் கிடைக்கும். இதிலுள்ள தேடல் வசதியும் மிக உபயோகமாக இருக்கும். உங்களுக்குத் தேவைப்படும் வார்த்தையை வரைபடமாகத் தரப்பட்டிருக்கும் விசைப் பலகையில் (keyboard) கிளிக் செய்வதன் மூலம் அந்த வார்த்தை இடம்பெறும் அத்தனை ஹதீஸ்களையும் ஒரே இடத்தில் பெற முடியும்.

இன்ஷா அல்லாஹ் இனி தொடர்ந்து ஹதீஸ் கலைச்சொல் அகராதி, திருக்குர்ஆனின் பிரபலமான விரிவுரையான தஃப்சீர் இப்னு கஸீரின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகியவையும் இத்தளத்தில் இடம்பெறச்செய்ய திட்டமிட்டுள்ளோம். இணையத்தில் இன்பத் தமிழில் நபிகளாரின் பொன்மொழிகளை வெளியிட வேண்டும் என்ற எங்களது அவா நிறைவேறுகிற இந்த நல்ல தருணத்தில் எங்களது அறக்கட்டளையின் நற்பணிகளில் எங்களுக்கு உறுதுணையாகவும் ஒத்துழைப்பாகவும் இருந்து ஓர் ஓட்டப்பந்தய வீரரை உற்சாகப்படுத்துவது போல இன்னும் நீங்கள் செய்ய வேண்டும் என இந்த மார்க்கப் பணியில் எங்களை உற்சாகப்படுத்துகிற அனைத்து மார்க்க அறிஞர்களுக்கும் சமுதாயத் தலைவர்களுக்கும் நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இத்தருணத்தில் பழைய நினைவுகளை அசைபோடுவது பொருத்தமாயிருக்கும் எனக் கருதுகிறோம். வரலாறு ஆகிவிட்ட ஸஹீஹுல் புகாரீயின் ஏழு தொகுதிகளைத் தமிழ் உலகிற்கு வழங்கியபோது நாங்கள் கடந்துவந்த பாதையை ஒரு கணம் திரும்பிப் பார்க்கிறோம். அதில்தான் எத்தனை அனுபவங்கள்! படிப்பறிவைவிட பட்டறிவுதானே வாழ்க்கையில் கை கொடுக்கிறது! ஒருவரின் அனுபவம் மற்றவருக்குப் பாடம் அல்லவா?

நம்முடன் வாழும் மனிதர்களுக்கு நம்மால் இயன்ற நன்மைகள் புரிவதில்தான் மனிதப் பிறவிக்கே அர்த்தம் உள்ளது. அதற்கு அடையாளமாக ஓர் அறக்கட்டளை நிறுவி அதன் வாயிலாகப் புண்ணியம் தேடிக்கொள்ள வேண்டும் என விரும்பினோம். எங்கள்மீது மாறாத பற்றும் பாசமும் கொண்டிருந்த எங்களுடைய அன்புத் தாயார் “ரஹ்மத் அம்மா” அவர்கள் பெயரில் “சென்னை ரஹ்மத் அறக்கட்டளை” ஒன்றை (பதிவு எண் 7841991) 1991ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 18ஆம் நாள் துவங்கினோம்.

நல்லுள்ளம் படைத்தவர்கள் அளித்த அரிய யோசனையின் பேரில் அல்லாஹ்வின் உதவி ஒன்றை மட்டுமே பலமாகக் கொண்டு மாசற்ற எண்ணத்தோடு இத்தூய பணியைத் தொடங்கினோம். இறுதி இறைவேதமாம் திருக்குர்ஆனுக்குத் தமிழில் பல மொழிபெயர்ப்புகள் வெளிவந்துவிட்டன. ஆனால் இறுதித் தூதர் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழித் தொகுப்புகள் அரபு மொழியில் பல இருந்தும் தமிழில் ஒன்றுகூட முழுமையாக மொழிபெயர்க்கப்படாமலிருந்தது வேதனை தரும் உண்மையாகும். நபிமொழித் தொகுப்புகளிலேயே முதன்மையானதும் திருக்குர்ஆனுக்கு அடுத்த இடத்தை வகிப்பதுமான ஸஹீஹுல் புகாரீயை முதலில் தமிழில் வெளியிடுவதெனத் தீர்மானித்தோம்.

இறையின் பேரருளால் ஸஹீஹுல் புகாரீ தமிழாக்கம் முதல் பாகம் 17.07.1994 அன்று வெளியானது. சென்னையில் மஸ்ஜித் மஃமூரில் மறைந்த தலைவர் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்கள் தலைமையில் முதலாம் பாகத்தின் வெளியீட்டு விழா நடைபெற்றது. வேலூர் ஜாமிஆ அல்பாகியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் மௌலானா, P.S.P. ஜைனுல் ஆபிதீன் பாகவி அவர்கள் நூலின் முதல் பிரதியை வெளியிட கிரசண்ட் கல்வி நிலையங்களின் நிறுவனர் B.S. அப்துர் ரஹ்மான் சாஹிப் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

இதைத் தொடர்ந்து 17.11.1996 அன்று இரண்டாம் பாகம் வெளியானது. வெளியீட்டு விழா இல்லாமலேயே இரண்டாம் பாகம் வெளியாயிற்று. மௌலவி, காஞ்சி R. அப்துர் ரவூப் பாகவி அவர்களின் பங்கு இந்தப் பாகத்திலிருந்து தொடங்கிற்று. அவரது அயராத உழைப்பை நன்றியுடன் நினைவுகூர்கிறோம்.

மூன்றாம் பாகத்தின் வெளியீட்டு விழா 21.11.1997 அன்று சென்னை புதுக்கல்லூரி வளாகத்தில் மறைந்த தலைவர் ஆ.கா.அ. அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்கள் தலைமையில் நடந்தது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.மு. அப்துல் வஹ்ஹாப் அவர்கள் நூலின் முதல் பிரதியை வெளியிட சதக் அறக்கட்டளையின் தலைவர் S.M. ஹமீத் அப்துல் காதிர் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். வேலூர் ஜாமிஆ அல்பாகியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரி பேராசிரியராக இருந்த மௌலவி அ. முஹம்மது கான் பாகவி நூலை அறிமுகம் செய்து உரையாற்ற கவிக்கோ அப்துர் ரஹ்மான் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். மேல்விஷாரம் தொழிலதிபர் M. ஹாஷிம் சாஹிப் அவர்கள் உள்பட பல பிரமுகர்கள் விழாவில் கலந்துகொண்டார்கள்.

மூன்றாம் பாகத்தின் அறிமுக விழா 10.04.1998 அன்று சிங்கப்பூர் சுல்தான் பள்ளிவாசல் இணைமண்டபத்தில் தலைவர். ஆ.கா.அ. அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்கள் தலைமையில் நடந்தது. பேராசிரியர் மௌலவி, அ.முஹம்மது கான் பாகவி நூலை அறிமுகம் செய்து உரையாற்றினார். விழாவில் சிங்கப்பூர் சுற்றுப்புறச் சூழல் துணை அமைச்சர் ஹாஜி சித்தீக் சனீப் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

இதையடுத்து 17.11.1998 அன்று ஸஹீஹுல் புகாரீ தமிழாக்கத்தின் நான்காம் பாகம் வெளியானது. வெளியீட்டு விழா நடைபெறவில்லை.

ஐந்தாம் பாகத்தின் வெளியீட்டு விழா 04.11.1999 அன்று துபை லூத்தா பள்ளிவாசலில் நடைபெற்றது. ஈமான் சங்கத் தலைவர் எஸ்.எம். ஸலாஹுத்தீன் அவர்கள் தலைமையில் வெளியிடப்பட்ட நூலின் முதல் பிரதியை ஈமான் பொதுச் செயலாளர் முத்துப்பேட்டை M. அப்துர் ரஹ்மான் M.P., பெற்றுக்கொண்டார். சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கவிக்கோ அப்துர் ரஹ்மான் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.

ஆறாம் பாகம் 13.09.2000 அன்று வெளியானது. வெளியீட்டு விழா நடக்கவில்லை.

ஏழாம் பாகம் வெளியீட்டு விழா 16.09.2001 அன்று முத்துப்பேட்டை ரஹ்மத் பெண்கள் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இத்துடன் ஸஹீஹுல் புகாரீயில் இடம்பெற்றுள்ள மொத்த 7563 ஹதீஸ்களும் நிறைவடைந்தன. வாசகர்களின் வசதி கருதி இப்போது அந்த ஏழு பாகங்களும் ஐந்து பாகங்களாக மறுபதிப்புச் செய்யப்பட்டு சிறிய வடிவில் கையடக்கமாக வெளிவந்துள்ளன. விரிவாக்கித் திருத்தப்பட்ட செம்பதிப்புகளாக அவை இன்று வாசகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுத் திகழ்கின்றன.

எமது பெருமை மிகு வெளியீடான ஸஹீஹுல் புகாரி தமிழாக்கத்தின் ஏழு பாகங்களில் சிலவற்றுக்கு மட்டுமே வெளியீட்டு விழா நடத்தினோம். அதுவும் தமிழ் பேசுவோர் இடையே நூலை அறிமுகம் செய்ய வேண்டும்; இந்த அரிய கருவூலத்தைப் பற்றிய செய்தி அனைவரது கவனத்திற்கும் வர வேண்டும் என்பதற்காகவே நடத்தப்பட்ட விழாக்களாகும் இவை. இதே நோக்கத்தில்தான் இஸ்லாமியத் தமிழ் பத்திரிகைகளில் நமது வெளியீடு தொடர்பாகத் தொடர்ந்து விளம்பரம் செய்துவருகிறோம்.

இதன் பலனாக இதுவரை வெளியிடப்பட்ட தமிழ் நூல்களிலேயே அதிக எண்ணிக்கையில் வாசிக்கப்படும் நூல் எமது வெளியீடுதான் என்ற பெருமை கிடைத்துள்ளது. ஸஹீஹுல் புகாரீ தமிழாக்கம் பல பதிப்புகள் வெளியாகி இலட்சக்கணக்கான பிரதிகள் விற்பனையாகியுள்ளன. அல்ஹம்து லில்லாஹ்.

இந்த நேரத்தில் இத்தூய பணியில் எங்களுக்கு உறுதுணையாக இருந்த இருந்து கொண்டிருக்கின்ற பல நல்லிதயங்களுக்கு நாங்கள் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம். 1992 அக்டோபரில் பணியில் சேர்ந்து ஆரம்பத்திலிருந்தே எமது அறக்கட்டளையின் நிர்வாகப் பொறுப்பை ஏற்று எங்களுடன் ஒருங்கிணைந்து செயலாற்றிவந்த மானேஜர் H. ஷிஹாபுத்தீன் அவர்களுக்கு இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவருக்கு அல்லாஹ் எல்லா நலன்களையும் அளித்திடுவானாக!

இந்தச் சிறப்பான தொண்டில் எங்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து அவ்வப்போது ஆலோசனைகள் வழங்கி தாம் சென்ற இடங்களிலெல்லாம் மக்களிடையே இதை அறிமுகப்படுத்தி அணிந்துரைகள் வழங்கி எங்களை உற்சாகப்படுத்திய மறைந்த தலைவர் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்களை எங்களால் மறக்க இயலாது. அன்னாரின் மறுமை வாழ்வு சிறப்படைய அல்லாஹ்வைப் பிரார்த்திக்கிறோம். மொழிபெயர்ப்புப் பணியில் ஆரம்ப முதல் ஈடுபட்டுக் கடுமையாக உழைத்த மௌலவி , காஞ்சி R. அப்துர் ரவூஃப் பாகவி அவர்களுக்கும் அவருடன் பணியாற்றிய வந்தவாசி மௌலவி, I. ஜமீல் பாஷா உமரீ அவர்களுக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வேலூர் அல்பாகியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்தபோதே இந்தப் பணியில் எங்களுக்கு ஒத்துழைப்பு நல்கிவந்த மௌலவி , அ. முஹம்மது கான் பாகவி அவர்கள் ஸஹீஹுல் புகாரீ மூன்றாம் பாகம் முதல் இன்றுவரை மொழிபெயர்ப்பாளர் குழுவின் தலைமை பொறுப்பேற்றுச் சிறப்பாகப் பணியாற்றிவருகிறார். முதலிரு பாகங்கள் வெளிவரும்வரை இப்பணி எமக்கு பெரும் சுமையாகத் தெரிந்தது. எமது அன்பு வேண்டுகோளை ஏற்று 1998ஆம் ஆண்டு பாகியாத்துஸ் ஸாலிஹாத்திலிருந்து விடைபெற்று அ. முஹம்மது கான் பாகவி அவர்கள் எமது அறக்கட்டளையில் சேர்ந்த பிறகு எமது சுமை குறைந்தது. அவருக்கு எங்களது தனிப்பட்ட நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

பொதுவாக ஒரு நற்பணி சீராக நடைபெறுவதற்கு முதலில் இறையருள் வேண்டும். அத்துடன் பொருள் வளமும் நல்ல சிறந்த மனிதர்களின் துணையும் வேண்டும். அப்போதுதான் அதில் வெற்றி காண முடியும். இந்த வகையில் சென்னை ரஹ்மத் அறக்கட்டளைக்கு வல்ல நாயன் எல்லா அம்சங்களையும சாதகமாக்கிக்கொடுத்துள்ளான். அவனுக்கே எல்லாப் புகழும்.

அடுத்து 1997ஆம் ஆண்டு ஸஹீஹுல் புகாரீ மூன்றாம் பாகம் முதல் மொழிபெயர்ப்புப் பணியில் சேர்ந்து 2009 மே மாதம்வரை சிறப்பாகப் பணியாற்றிய மேட்டுப்பாளையம் மௌலவி , சா. அப்துந் நாஸிர் பாகவி அவர்களுக்கு எங்கள் நன்றி. அதிகமாகப் பேசாமல் தாம் உண்டு தம் மொழிபெயர்ப்புப் பணி உண்டு எனத் தம்மை முழுமையாகப் பணியில் ஈடுபடுத்திக்கொண்டு கர்மமே கண்ணாயிருந்தவர் அவர்.

தமிழாக்க மேற்பார்வையாளராக இருந்து எங்கள் அறப்பணிக்கு அழகு சேர்த்துவரும் நாடறிந்த கவிஞர் டாக்டர் கவிக்கோ அப்துர் ரஹ்மான் அவர்களுக்கு எங்களது ஆழிய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். தமக்குரிய பல்வேறு அலுவல்களுக்கிடையே ஹதீஸ் தமிழாக்கத்தைப் பார்வையிட்டு அரிய பல யோசனைகளை நல்கிவருகிறார் கவிக்கோ. அவருக்கு இறைவன் உடல்நலத்தையும் மனவளத்தையும் அளித்திடுவானாக!

எமது பதிப்பகத்தில் கணிணி இயக்குநராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் கடந்த 1996ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து 2004ஆம் ஆண்டு வரை சிறப்பாகப் பணியாற்றிய தக்கலை முனைவர், மௌலவி, அ. ஜாகிர் ஹுசைன் பாகவி M.A.,Ph.D., அவர்களுக்கும் நன்றி. எமது அலுவலகத்தில் கணிணி இயக்குநராகவும் நூல் வடிவமைப்பாளராகவும் பணியில் சேர்ந்து சில ஆண்டுகள் பணியாற்றிய கொடுவாயூர் மௌலவி , எஸ்.என். ஜஅஃபர் ஸாதிக் பாகவி அவர்களுக்கும் சென்னை மௌலவி , எம்.ஏ. ரஹ்மத்துல்லாஹ் ஜமாலி அவர்களுக்கும் எங்கள் நன்றி. கடந்த 2001ஆம் ஆண்டில் மொழிபெயர்ப்பாளராகச் சேர்ந்த மேலப்பாளையம் மௌலவி, சா. யூசுப் சித்தீக் மிஸ்பாஹி M.A., M.Phil., அவர்கள் இன்றுவரை சிறப்பாகப் பணியாற்றி, இப்போது மேலாய்வாளராகப் பணி உயர்வு பெற்றுள்ள அவருக்கும் எங்கள் நன்றி. 2002ஆம் ஆண்டு கணிணி இயக்குநராகவும், நூல் வடிவமைப்பாளராகவும் சேர்ந்த காயல்பட்டிணம் ஹாஃபிழ் M.N. புகாரீ அவர்கள் இன்றுவரை சிறப்பாகப் பணியாற்றிவருகிறார். அவருக்கும் எங்கள் நன்றி. 2007ஆம் ஆண்டில் மொழிபெயர்ப்பாளராகப் பணியில் சேர்ந்த அய்யாபுரம் மௌலவி , அஃப்சலுல் உலமா கா. ஹுசைன் பாகவி M.A., அவர்கள் இன்றுவரை சிறப்பாகப் பணியாற்றிவருகிறார். அவருக்கும் எங்கள் நன்றி. 2008ஆம் ஆண்டு கணிணி இயக்குநராகவும், நூல் வடிவமைப்பாளராகவும் சேர்ந்த தொண்டி அ. ஹைதர் அலீ அவர்கள் இன்றுவரை சிறப்பாகப் பணியாற்றிவருகிறார். அவருக்கும் நன்றி. 2009ஆம் ஆண்டு மொழிபெயர்ப்பாளராக எமது பதிப்பகத்தில் சேர்ந்த மேலூர் பூதமங்கலம் அஃப்சலுல் உலமா, மௌலவி, சா. அப்துல்லாஹ் பாகவி அவர்கள் தொடர்ந்து பணியாற்றிவருகிறார். அவருக்கும் எங்கள் நன்றி. சென்னை ரஹ்மத் அறக்கட்டளை துவங்கப்பட்ட வேளையில் பிரபல நபிமொழித் தொகுப்பான ஸஹீஹுல் புகாரீயைத் தமிழில் வெளியிடுவதும் முத்துப்பேட்டையில் ரஹ்மத் பெண்கள் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி ஆரம்பிப்பதும்தான் எங்களது முதல் நோக்கமாக இருந்தன. ஆனால், ஸஹீஹுல் புகாரீ தமிழாக்கம் வெளியிட்டதால் கிடைத்த அனுபவங்கள், அதனால் ஏற்பட்ட பொதுநன்மைகள், அறிஞர்களும் சான்றோர்களும் தெரிவித்த யோசனைகள் ஆகியவற்றையடுத்து ஆறு பிரபல நபிமொழித் தொகுப்புகளில் (ஸிஹாஹ் சித்தா) ஏனைய தொகுப்புகளையும் தமிழில் வெளியிட எண்ணியுள்ளோம்.

ஸஹீஹுல் புகாரீயின் முதலாவது ஹதீஸ் : “செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன”. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதுதான் கிடைக்கின்றது. இதன் அடிப்படையில் நமது நல்லெண்ணத்தை அறிந்து நாம் எண்ணியதை அல்லாஹ் நிறைவேற்றித் தந்துள்ளான். இனியும் நாம் எண்ணியுள்ள இதர நூல்களும் வெளிவர அல்லாஹ் துணை நிற்பானாக! ஸஹீஹுல் புகாரீயின் கடைசிப் பாடத்தில் இடம்பெற்றுள்ள திருமறை வாசகம் பின்வருமாறு கூறுகிறது: நாம் மறுமைநாளில் நீதித் தராசுகளை அமைப்போம் (21:47). அவற்றில் மனிதர்களின் செயல்களும் சொற்களும் நிறுக்கப்படும்.

அவ்வாறு நிறுக்கப்படும்போது எங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு நன்மைகள் ஏற்கப்பட வேண்டும். அதுவே எங்களது அவா.

இத்தளத்திலுள்ள நிறைகளுக்கு அல்லாஹ்வே உரிமையானவன். குறைகள் இருப்பின் அவை எங்களைச் சேரும். அவற்றை எங்கள் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.

ஸஹீஹுல் புகாரீயின் இறுதி ஹதீஸில் (7563) வந்துள்ளபடி , “சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி” (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறோம்). சுப்ஹானல்லாஹில் அழீம் (கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கின்றோம்) என்று கூறி நிறைவு செய்கிறோம்.

இப்படிக்கு
எம். ஏ. முஸ்தபா
அறங்காவலர்
சென்னை ரஹ்மத் அறக்கட்டளை.
RAHMATH PATHIPPAGAM
RAHMATH BUILDING
No.6, Second Main Road, C.I.T. Colony, Mylapore,
Chennai – 600004. Tamil Nadu.
Phone : 91 44 24997373
Email : buhari@rahmath.net
www.rahmath.net.